படிப்பை பாதியில் நிறுத்திய 51 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த திருவண்ணாமலை கலெக்டர்
|பள்ளி படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்திய 51 மாணவர்களை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மீண்டும் பள்ளியில் சேர்த்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் புதூர் பகுதி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பலர் வறுமை, குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் பள்ளி படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்தியுள்ளனர். இது குறித்த தகவல் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் பள்ளி படிப்பை நிறுத்திய மாணவ, மாணவிகளை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி படிப்பை பாதியில் நிறுத்திய 51 மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் அய்யம்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சேர்த்து விட்டார். அவர்களுக்கு புத்தகப்பை, சீருடை உள்ளிட்டவற்றை வழங்கவும் ஏற்பாடு செய்தார். மாவட்ட கலெக்டரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.