3 நாட்கள் நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
|வரும் 30ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை பட்டிமன்றம், கருத்தரங்கத்துடன் 3 நாள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இதனால் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 3 நாட்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி.திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் வருகிற 30, 31, ஜனவரி 1-ந்தேதிகளில் கன்னியாகுமரியில் நடக்கிறது. இதில் 30, 31-ந்தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 30-ந்தேதி மாலை 6 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு முதல்-அமைச்சர் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.
ஜனவரி 1-ந்தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால், திறந்து வைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் உலக அளவில் வெற்றி பெற்றவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தலைமை தாங்குகிறார். தொடர்ந்து கலை பண்பாட்டுத் துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.