முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்திக்கிறார் திருமாவளவன்
|ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முதல்-அமைச்சரை, திருமாவளவன் சந்திக்க உள்ளார்.
சென்னை,
வி.சி.க. துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் ஆதவ் அர்ஜுனா பேசியது தவறுதான். அது அவரது தனிப்பட்ட கருத்து.. கட்சியின் கருத்து அல்ல என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் இன்று நேரில் சந்திக்கிறார். இதன்படி இன்று பகல் 1 மணிக்கு முதல்-அமைச்சரை அவரது இல்லத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்திக்க உள்ளார். முதல்-அமைச்சரை சந்தித்து வி.சி.க. சார்பில் வெள்ள நிவாரண நிதியை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வி.சி.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளமும், எம்.பி.க்களின் 2 மாத சம்பளமும் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.