< Back
மாநில செய்திகள்
ஆடுகள் இருந்த இடத்தில்தான் அடைத்து வைத்தார்கள் - குஷ்பு பேட்டி
மாநில செய்திகள்

ஆடுகள் இருந்த இடத்தில்தான் அடைத்து வைத்தார்கள் - குஷ்பு பேட்டி

தினத்தந்தி
|
3 Jan 2025 6:30 PM IST

ஆடுகள் இருந்த இடத்தில்தான் அடைத்து வைத்தார்கள் என்று குஷ்பு கூறினார்.

மதுரை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு நீதி கேட்டும் பாஜக மகளிரணி சார்பில் இன்று பேரணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுரையில் இருந்து சென்னைக்கு மகளிரணி பேரணியாக செல்லும் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால், இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து மதுரையில் இருந்து பாஜக மகளிர் அணியினர் சென்னைக்கு பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணிக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தலைமை தாங்கினார். ஆனால், பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி பேரணி தொடங்கியது. அப்போது அங்கு இருந்த போலீசார் பேரணியாக செல்ல முயன்ற குஷ்பு உள்பட பாஜக மகளிரணியினரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், தடையை மீறி பேரணி செல்ல முயன்று கைதான குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்போது காரில் இருந்தபடி குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- " ஆட்டுக் குட்டிகள் இருந்த இடத்தில் தான் அடைத்து வைத்தார்கள்... எனக்கு பரவாயில்லை.. அங்கு நிறைய ஆடுகள் இருந்தன.. " என்று கூறினார். பாஜகவினர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதே திருமண மண்டபத்தில் ஆடுகளையும் அடைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜக நிர்வாகி குஷ்பு, மகளிரணி மாநிலத் தலைவர் உமாரதி உள்ளிட்ட பாஜகவினர் 314 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்