< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்றத்தில் மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர் - எல்.முருகன் விமர்சனம்
மாநில செய்திகள்

நாடாளுமன்றத்தில் மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர் - எல்.முருகன் விமர்சனம்

தினத்தந்தி
|
10 March 2025 3:54 PM IST

பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை என கூறி விட்டு செயல்படுத்தாத திட்டத்திற்கு நிதி கோருவது ஏன் என எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தி.மு..கவினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் இன்று அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர்.

மத்திய கல்விமந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்று தி.மு.க.வினருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசு பள்ளி மாணவர்களை வஞ்சித்து தி.மு.க.வினர் செய்யும் கபட அரசியலை அவர் தோலுரித்துக்காட்டி உள்ளார்.

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழியை கற்கும் வசதி உள்ள நிலையில் தி.மு.க. அரசு தங்கள் அரசியல் விளையாட்டுக்காக தமிழக அரசு பள்ளி மாணவர்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறது. தி.மு.க.வினர் நடத்தும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மூன்று மொழியை கற்றுக் கொள்ள தி.மு.க.வினர் அனுமதிக்கவில்லை.

பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக ஒப்புதல் தெரிவித்து விட்டு பின்னர் அரசியல் காரணங்களுக்காக யூடர்ன் அடித்ததையும் தர்மேந்திர பிரதான் அவர்கள் வெட்டவெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போல தி.மு.க.வினரின் புளுகு மூட்டைகள் அம்பலபட்டு போனதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது திசைதிருப்பும் அரசியலை கையில் எடுத்துள்ளார்.

தி.மு.க.வினரை பார்த்து கேள்வி எழுப்பினால் தமிழக மக்களை மந்திரி தர்மேந்திர பிரதான் அவமானப்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடைமாற்றம் செய்கிறார்.

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தி.மு.க.வினரிடம் பதில் இல்லை.

பிஎம் ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை என்றும் அப்படி முன்வராத தன்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை எனக் கூறி விட்டு செயல்படுத்தாத திட்டத்திற்கு நிதி கோருவது ஏன்..?

தமிழக மாணவர்களுக்கு நிதி தரவில்லை என பொத்தாம் பொதுவாக கூறுவதால் முதல்-அமைச்சர் கூறுவது உண்மையாகி விடாது.

மும்மொழிக்கொள்கையை இந்தி திணிக்கப்படுவதாக கூறி தி.மு.க.வினர் செய்யும் வஞ்சக அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை.

தமிழக பா.ஜ.க. நடத்தி வரும் சமக்கல்வி_எங்கள்உரிமை கையெழுத்து இயக்கமே இதற்கு சாட்சி. லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்தி பூச்சாண்டி காட்டி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்