அவப்பெயரை உருவாக்க பூதக்கண்ணாடி போட்டு தேடுகின்றனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி
|விமர்சனங்களை பார்த்து நாங்கள் ஒரு போதும் அஞ்சியது இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கரூர்,
கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த காலத்திலும் குறிப்பாக மின்வாரியம் சம்பந்தமாக அதானியை சந்திக்கவில்லை என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு பிறகும் அந்த அறிக்கை குறித்து கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றறன. ஒன்று ஒரு முறை படித்து தெரிந்திருக்கலாம். படித்து புரியவில்லை என்றால் பலமுறை படித்து யோசித்திருக்கலாம். படித்தும் புரியவில்லை, தெரிந்தவர்களிடம் கேட்டும் புரிந்து கொள்ள பக்குவமும் இல்லை. அந்தளவுக்கு அறிவுத்திறனும் இல்லை.
ஒரு கருத்தை பேசும்போது, மாற்றுக் கருத்தை முன் வைக்கிறோம். இந்த 3 ஆண்டுகளில் அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான வர்த்தக தொடர்புகள் இல்லை என தெளிவாக கூறியுள்ளோம். நாங்கள் ஒப்பந்தம் போட்டதைபோல, எங்கள் அரசு ஒப்பந்தம் போட்டதைபோல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சி செய்கின்றனர்.
அந்த முயற்சி ஒரு போதும் எடுபடாது, அது மக்களுக்கு தெளிவாக தெரியும். முதல்-அமைச்சர் வழங்கக்கூடிய சிறப்பு திட்டங்களையும், பொற்கால ஆட்சியையும் மக்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 2026 சட்டசபை தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கும். இது மக்கள் மனதில் வைத்திருக்க கூடிய அன்பு, பாசம். இதுதான் யதார்த்த நிலை.
நாட்டிலேயே மிகக் குறைந்த யூனிட் ஒன்றுக்கு ரூ.2.61 என்ற அளவில் கொள்முதல் செய்வது தமிழ்நாடு மின்சார வாரியம்தான். இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் அரசு மீது ஏதாவது ஒரு புகார்களை சொல்லிவிட முடியாதா, மக்கள் மத்தியில் ஒரு அவப்பெயரை உருவாக்கிட முடியாதா என்பதை பூதக்கண்ணாடி போட்டு சல்லடை போட்டு தேடுகின்றனர். தேடி தேடி பார்க்கின்றனர். சில முயற்சிகளும் எடுக்கின்றனர். அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. விமர்சனங்களை பார்த்து நாங்கள் ஒரு போதும் அஞ்சியதும் இல்லை, சிந்தித்ததும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.