'தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை' - ஓ.பன்னீர்செல்வம்
|தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அ.இ.அ.தி.மு.க.வின் அனைத்து தோழர்களும் எழுச்சியுடன் ஒன்று சேர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்துவார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கிறது. அதற்குள் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழலாம். தி.மு.க. அரசு மீது கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் அவர்களை நம்ப தயாராக இல்லை. தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை."
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.