கவர்னர் ஆர்.என்.ரவியை பின்தொடர்ந்து வந்த வாலிபரால் பரபரப்பு
|தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.
தஞ்சாவூர்,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு நாள் பயணமாக நேற்று தஞ்சை வந்தார். காலையில் சரசுவதி மகால் நூலகத்தை பார்வையிட்ட கவர்னர் மாலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தந்தார். நேற்று பிரதோஷ தினம் என்பதால் நந்தியம்பெருமானை வழிபட்டு விட்டு பிறகு கோவிலை விட்டு வெளியே சென்றார்.
சரசுவதி மகால் நூலகம், பெரிய கோவில் ஆகிய இடங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்றபோது அவர் அருகிலேயே ஒரு வாலிபர் சென்று வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த கவர்னரின் பாதுகாப்புக்கு வந்த போலீசார், அவர் யார்? என விசாரிக்கும்படி உள்ளூர் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து பெரிய கோவிலில் நேற்று மாலை போலீசார் அந்த வாலிபரை பிடித்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர். அவரை தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்த ஜாபர்தீன் என்பது தெரிய வந்தது.
இவர் ஏன் கவர்னரை பின் தொடர்ந்து வந்தார்? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ஆர்வமிகுதியால் கவர்னரை பின்தொடர்ந்து சென்றதாகவும், வேறு எதுவும் காரணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.