இந்தி பேசும் பல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு மொழிதான் தெரியும் - ப.சிதம்பரம்
|இந்தி பேசும் பல மாநிலங்களில் ஒருமொழித்திட்டம் தான் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக கவர்னர் பங்கேற்ற தூர்தர்ஷன் பொன்விழா ஆண்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வாசகங்கள் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "மக்களிடம் என்ன எண்ணங்கள், சிந்தனைகள் இருக்கின்றனவோ அதற்கு நேர் மாறாக கருத்து தெரிவிப்பதுதான் தமிழ்நாடு கவர்னர். மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை இருக்கிறது என்பதே தவறு. இந்தி பேசும் பல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு மொழிதான் தெரியும்.
இந்தி பேசும் பல மாநிலங்களில் ஒருமொழித்திட்டம் தான் உள்ளது. அங்கு ஆங்கிலம் கற்று தருவதும் கிடையாது. ஆங்கில ஆசிரியர்களும் கிடையாது. ஆங்கில புத்தகங்களும் கிடையாது. அங்குள்ள மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வது கிடையாது. அவர்களால் ஒரு வாசகத்தைக் கூட ஆங்கிலத்தில் எழுத முடியாது. இதைப்பற்றி ஒரு கட்டுரை ஒன்றை நான் எழுதியுள்ளேன்.
தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக இருமொழித்திட்டத்தை எந்த அரசு வந்தாலும் அதனை கடைப்பிடிக்கிறது. அதற்காக விரும்பியவர்கள் இந்தி படிக்க கூடாது என்று கூறவில்லை. இந்தி பிரசார சபை ஒன்று சென்னையில் இருக்கிறது. அந்த சபை நடத்துகிற ஆண்டுத் தேர்வில் பல்லாயிரம் மாணவர்கள் இந்தி படித்து தேர்ச்சி பெற்று வேலைக்கு செல்கின்றனர். தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது. சி.பி.எஸ்.சி. பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது. இந்தியை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கு எந்த தடையும் இல்லை. மக்களுடைய எண்ணைத்தை பிரதிபலிக்கக்கூடியது இருமொழி திட்டம்தான் இதை கவர்னர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று ப.சிதம்பரம் கூறினார்.