
உருவானது தவெக கூட்டணி: விஜய்க்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு

2026 தேர்தலில் தவெக கூட்டணியில் இடம்பெறுவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்.
சென்னை,
வரும் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்குள் முட்டல், மோதல், மக்கள் யார் பக்கம் என கேள்விகள். ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும், வேறு கட்சி ஏதும் பலம் பெற்று விடக்கூடாது என்று காய் நகர்த்தும் கால கட்டம். ஒரு காலத்தில் அண்ணாதுரை - கருணாநிதி என்று ஆளுமை மிகுந்தவர்கள் இருந்தனர். அது போலவே, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா என்ற ஆளுமைகளும் இருந்தன. இன்று இவர்கள் இல்லாமல், தமிழக அரசியலில் ஆளுமை குணம் வெற்றிடமாக இருக்கிறது.
இந்தநிலையில், தமிழக அரசியலில் களமிறங்கியிருக்கும் விஜய், தனது முதல் மாநாட்டிலேயே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், கொள்கை ரீதியாக பாஜகவை எதிரியாகவும், அரசியல் ரீதியாக திமுகவை தனது எதிரியாகவும் தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. மேலும், மாவட்ட நிர்வாகிகள், தவெக அணிகள் என கட்சி பணிகளில் தொடர்ந்து தீவிரமும் காட்டி வருகிறார்.
விஜய் இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை என்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பலம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி வரும் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் நெருங்கும் போது கூட்டணிக் குறித்து பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு முதல் கட்சியாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கூட்டணியில் இணையும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் தவெக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் லிக் கட்சியின் தலைவர் முஸ்தபா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-திமுக தொடர்ந்து இஸ்லாமிய மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது. அற்ப செயல்களில் ஈடுபடுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். வாக்கு வங்கிக்காக சிலர் மூலம் இஸ்லாமியர்களை திசை திருப்ப திமுக சதி செய்தது. இஸ்லாமிய மக்களின் பக்கம் நின்றவர் விஜய். தனது கட்சியில் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர் விஜய்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தவெக கட்சிக்கு 15% முதல் 20% வரை வாக்கு சதவீதம் கிடைக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிக்கை மூலம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.