மாநில அரசின் நிதிநிலை கடுமையாக பாதிப்பு - கவர்னர் உரையில் தகவல்
|மாநில அரசின் நிதிநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையின் இன்றைய கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளதாவது:-
தேசிய அளவில் முத்திரை பதித்த பல்வேறு முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்திய வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு. இம்முயற்சிகளுக்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக, நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி தமிழ்நாட்டின் பெயரை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கச் செய்துள்ளார்.
இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சூடான, சத்தான காலை உணவு தினந்தோறும் வழங்கப்படுகிறது. இதனால், அவர்களின் வருகையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது மட்டுமின்றி, ஊட்டச்சத்தும் அதிகரித்து, வகுப்பறையில் அவர்களின் கவனிக்கும் திறனும் மேம்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கிராமப்புறங்களில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 34,987 தொடக்கப் பள்ளிகளில் 17.53 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் நலன் மற்றும் கல்வி வளர்ச்சி மீது இந்த அரசு கொண்டுள்ள அக்கறையையும், அசைக்க முடியாத உறுதிப்பாட்டினையும் எடுத்துக்காட்டும் வகையில் இத்திட்டம் விளங்குகிறது.
மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் மாநில அரசு இவ்வாறு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவினை வழங்கவில்லை. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை விடுவிக்கக் கோரி தொடர்ந்து முறையிட்டும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததைக் காரணமாகக் கூறி, மத்திய அரசு நடப்பு ஆண்டில் இதுவரை எந்தவொரு நிதியையும் விடுவிக்கவில்லை.
2,152 கோடி ரூபாய் அளவில் உள்ள இந்நிலுவைத் தொகையானது, ஆசிரியர்களின் ஊதியம், பள்ளிக் கட்டடங்களைப் பராமரித்தல் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாததாகும். மத்திய அரசு இந்த நிதியை வழங்காததால், தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து மாநில அரசே இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்தச் செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. இதனால், மாநில அரசின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
44 லட்சம் மாணவர்கள், 22 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 21,276 பணியாளர்களின் எதிர்காலம் ஆகியவை இந்நிதி உரிய நேரத்தில் விடுவிக்கப்படுவதையே சார்ந்துள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் நலன் காக்க மத்திய அரசு இந்நிதியை விரைவில் விடுவிக்கும் என்று மாநில அரசு நம்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.