கத்திக்குத்து சம்பவம்; டாக்டரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்
|சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவருடைய குடும்பத்தினரிடமும் டாக்டர்களிடமும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் ஒருவரால் தாக்கப்பட்டதால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை டாக்டர் பாலாஜியை, தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவருடைய குடும்பத்தினரிடமும், டாக்டர்களிடமும் தெரிவித்தார்.
இதன்பின் அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்ற டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை பெருங்களத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து தற்போது தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த மே மாதம் முதல் அந்த இளைஞருடைய தாயார் இந்த மருத்துவனையில் புற்றுநோய் பிரச்சனைக்காக இதே டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவரது தாயாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்பட்டது குறித்து, டாக்டர் பாலாஜி ஜெகந்நாதனை அந்த இளைஞர் ஏற்கனவே சந்தித்து கேட்டுள்ளார் என்றும் தெரிகின்றது.
இந்த நிலையில், இன்று மருத்துவமனைக்கு வந்த அந்த இளைஞர், டாக்டர் பாலாஜி ஜெகந்நாதனை கத்தியால் குத்தியிருக்கின்றார். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது டாக்டர் பாலாஜியின் உடல்நலம் சீராக உள்ளது. இன்னும் இரண்டு, மூன்று மணி நேரத்திற்குள் சுயநினைவுக்கு வந்துவிடுவார். மேலும் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் காவல் துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு செயல். இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, தமிழகத்தில் உள்ள அரசு டாக்டர்கள் அனைவர் மீதும் அக்கறை கொண்டது முதல்-அமைச்சரின் அரசு. அவர்களுக்கு தேவையான உரிய பாதுகாப்பினை கண்டிப்பாக, உறுதியாக வழங்க வேண்டும் என்று நமது முதல்-அமைச்சர் தெளிவாக இருக்கின்றார். கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசினார்.
கேள்வி: தற்போது டாக்டர் எப்படி இருக்கிறார்?
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்: தலைப்பகுதியில் நான்கு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு ஏற்பட்ட காயம், இடது கழுத்து பகுதிகளில் ஒரு காயம், இடது தோள்பட்டையில் ஒரு காயம், இடது காதுமடலில் ஏற்பட்ட ஒரு காயம். இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. டாக்டர்கள் எல்லாம் உடன் இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தார்கள் வந்திருக்கிறார்கள். குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறோம். அவருடைய தாயார், மனைவி (டாக்டர்) ஆகியோர் உடன் உள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார்.
கேள்வி: 6 மாதமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறார்கள். அவருடைய தாயாருக்கு எந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது?
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்: சரியான முறையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அந்த டாக்டர் சொன்னதை வைத்து, காலையில் கூட இங்கு டாக்டரிடம் அரை மணி நேரம் பேசியிருக்கிறார். உடன் நர்ஸ் இருந்திருக்கிறார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர் ஒரு தவறான முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு சிறந்த டாக்டர். (தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் டாக்டர்)
கேள்வி: பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய நிலையில், இதுமாதிரி ஒரு சம்பவம் மருத்துவமனையில் நடந்திருக்கிறது. இதன் பாதுகாப்பு எப்படி என்பது குறித்து...
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்: நீங்களே சொல்கிறீர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள் என்று. இங்கே அந்த இளைஞர் விக்னேஷ் தொடர்ந்து 6 மாத காலமாக இந்த மருத்துவமனைக்கு அவருடைய தாயாரை அழைத்து வந்திருக்கிறார். அதனால், அவர் மீது எந்தவிதமான சந்தேகமோ வரவில்லை. அந்த டாக்டருக்குக்கூட எந்தவித சந்தேகமோ, பயமோ வரவில்லை. தொடர்ந்து வந்து சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து டாக்டரிடம் தொடர்பில் இருந்திருக்கிறார். அதுவும் அரை மணி நேரம் டாக்டரிடம் பேசி கொண்டும் இருந்திருக்கிறார். அதனால் இது தவிர்க்கமுடியாத சம்பவம். இனிமேல், இதுபோல நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
கேள்வி: மருத்துவனையில் இதுபோல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. தொடர்ச்சியாக அவர் சொல்வது உண்மை இருக்கிறது என்று மேற்கோள் காட்டுகிறார். இது பற்றி...
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்: இது தவிர்க்க முடியாத ஒன்று. இனிமேல் நடக்காமல் தடுப்போம். நான் ஏற்கனவே சொன்னதுபோல, விக்னேஷ் 6 மாதமாக அவரது தாயாரை அழைத்து கொண்டு இங்கு வந்திருக்கிறார். இதே மருத்துவமனையில் அவரது தாயாருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டிருக்கிறது. அந்த டாக்டரிடம் அரை மணி நேரம் பேசியிருக்கிறார். தனியார் மருத்துவமனைக்கு சென்று அந்த டாக்டர் சொன்னதை கேட்டு இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். ஏதோ கோபத்தின் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஆனால், கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் நடக்காமல் பார்த்து கொள்ளப்படும்.
கேள்வி: வேறு ஏதாவது காழ்ப்புணர்ச்சி இருக்கிறதா? வேறு நோயாளிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா?
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்: விசாரித்து கொண்டிருக்கிறோம். அதுபோல எதுவும் இல்லை. மற்ற நோயாளிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். முதல் முன்னுரிமை டாக்டர் பாலாஜிக்கு சரியான சிகிச்சை அளித்து அவரை மீட்டெடுப்பதுதான். அனைத்து டாக்டர்களுக்கும் தகுந்த பாதுகாப்பை இந்த அரசு வழங்கும் என்று பதிலளித்து உள்ளார்.