மாணவ, மாணவிகளின் பாதுகாப்பே பிரதானமானது - கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை
|அண்ணா பல்கலை., படிக்கும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சமடைய வேண்டாம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மேற்கொண்ட ஆய்வு குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துயரமிகு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு கவர்னர் -வேந்தர் அவர்கள் இன்று (28.12.2024) மதியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மாணவ, மாணவியர்களுடன் உரையாடவும். நமது மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திட தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்திடவும் வருகை தந்தார்.
இவ்வாய்வின் போது, தமிழ்நாடு கவர்னர் - வேந்தர் அவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கவர்னர்-வேந்தர் அவர்கள் மாணவர்களுடன் (பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியாக) கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் வாயிலாக பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு மாணவர்கள் கூறிய பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பொறுமையாக கேட்டறிந்தார்.
கவர்னர் அவர்கள் பலகலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்று கூறியதுடன், மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும், மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.