சென்னையை பரபரப்பாக்கிய சிறுமி படுகொலை... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
|வேலைக்கார சிறுமி அடித்துக்கொல்லப்பட சம்பவத்தில் வீட்டு உரிமையாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைந்தகரை,
சென்னை அமைந்தகரை மேத்தாநகர் சதாசிவம் தெருவில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வருபவர் முகமது நவாஸ். இவரது மனைவி பெயர் நபியா. இவர்கள் வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில் தீபாவளி தினத்தன்று சிறுமி, வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்டநேரம் ஆகியும் சிறுமி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த முகமது நவாஸ்-நாசியா தம்பதி, கதவை உடைத்து பார்த்தபோது சிறுமி, குளியல் அறையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பயந்துபோன இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அதன்பிறகு ஒரு நாள் கழித்து தீபாவளிக்கு மறுநாள் மாலையில் இதுபற்றி அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குளியல் அறையில் இறந்து கிடந்த சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
அப்போது சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த அந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் தாயின் அரணைப்பில் இருந்த சிறுமி, குடும்ப சூழ்நிலை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு முகமது நவாஸ் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கேயே தங்கி வீட்டு வேலைகள் செய்து வந்த சிறுமிக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என்றும், சிறுமியை அவரது தாயார் பார்க்கவும் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் தீபாவளி தினத்தன்று வீட்டில் சரியாக வேலை செய்யவில்லை என முகமது நவாஸ், அவரது மனைவி நாசியா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சிறுமியை சரமாரியாக தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்த சிறுமியை குளித்துவிட்டு வரும்படி கூறியதாகவும், அதற்காக குளியலறைக்கு சென்ற சிறுமி அங்கேயே மயங்கி விழுந்து இறந்து போனதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனவே சிறுமியை அடித்துக்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அதனை உறுதியாக சொல்ல முடியும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
குளியல் அறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என தெரியாமல் பரிதவித்தனர். மேலும் சிறுமி இறந்து ஒரு நாள் ஆகிவிட்டதால் துர்நாற்றம் வீச தொடங்கியது. அதனை மறைக்க வீடு முழுவதும் வாசனை திரவியங்களை தெளித்து உள்ளனர்.
இதுபற்றி அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது நவாஸ், அவரது மனைவி நாசியா மற்றும் அவரது நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, சீமா, மகேஸ்வரி ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பாலியல் வன்கொடுமை ஏதாவது நடந்துள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.