'அமரன்' திரைப்படத்தை பள்ளி, கல்லூரிகளில் திரையிட வேண்டும் - பா.ஜனதா கோரிக்கை
|அமரன் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜனதா மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் ஓர் அங்கமான காஷ்மீரை பாதுகாத்து அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாக்க எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள். அப்படி, காஷ்மீர் எல்லையில் பணியாற்றி, வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனின், தியாக வாழ்வையும், காதல் வாழ்க்கையையும் அமரன் எனும் திரைப்படத்தின் மூலம் கலை படைப்பாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கி உள்ளார்.
இந்த படம், தமிழக மக்களின் மனங்களை வென்றுள்ளது. ஆனால், அமரன் திரைப்படத்துக்கு எதிராக சிலர் அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். சிலர் இந்தியாவுக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராகவும் பேசி வருகின்றனர். அமரன் திரைப்படம் எதிர்ப்பு என்ற பெயரில் பிரிவினை சித்தாந்தத்தை இங்கே விதைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.
தேச பக்தியை வலியுறுத்தும் அமரன் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு வழங்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரிகளில் அமரன் திரைப்படத்தை திரையிடவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.