வழக்கு தொடர்பாக ஆலோசிக்க அழைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வக்கீல்
|கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்து கருவை வக்கீல் கலைத்துள்ளார் என்று இளம்பெண் புகார் அளித்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளேன். எனது பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். எனது தாயாரின் ஓய்வூதியம் பணம் கிடைப்பதற்காக எனது தோழியின் அறிவுறுத்தலின் பேரில் கோர்ட்டில் வழக்கு தொடர நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் ஒருவரை சந்தித்து பேசினேன்.
கடந்த 9-6-2023 அன்று என்னை செல்போனில் தொடர்பு கொண்ட வக்கீல் வழக்கு தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக்கூறி அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து மிரட்டி வந்தார். இதற்கிடையே நான் கார்ப்பமானேன். பின்னர் கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்து அந்த கருவையும் கலைத்துள்ளார்.
இதுதொடர்பாக வக்கீலிடம் கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், எனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டினார். எனவே சம்பந்தப்பட்ட வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதனடிப்படையில் புகார் மீது அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.