புலன் விசாரணையை வெளியில் சொல்லக்கூடாது... இருந்தாலும் சொல்கிறேன் - காவல் ஆணையர் அருண்
|இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை நடந்த புலன் விசாரணையில், ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
சென்னை,
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "எப்.ஐ.ஆர். இப்படி பதிவு செய்திருக்க வேண்டும், அப்படி பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் என்ன கூறுகின்றனரோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் எப்.ஐஆர். இந்த வழக்கில் அப்படித்தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்தோம்.
கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தனிப்படைக்கும் ஒரு பணியைக் கொடுத்து விசாரித்தோம். சந்தேகப்படும் நபர்கள் சிலரை கொண்டுவந்து விசாரித்தோம். விசாரணைக்குப் பின் அறிவியல்பூர்வமாக ஆதாரங்களை சேகரித்து, செல்போன் டவர் லொகேஷன், சிடிஆர் எல்லாம் பதிவிட்டு டிசம்பர் 25-ம் தேதி காலையிலேயே காவல் துறை குற்றம்சாட்டப்படும் நபரை பிடித்து விடுகிறோம். குற்றத்தை அந்த நபர்தான் செய்தார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, மேலும் விசாரணை செய்து அவர்தான் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்திய உடன் கைது செய்து ரிமாண்ட் செய்தோம். இதுதான், இந்த வழக்கைப் பொறுத்தவரையில் நடந்தது.
போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்ஐஆர் பதிவு செய்யும்போது, சி.சி.டி.என்.எஸ். எனும் ஆன்லைன் போர்ட்டல் ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகிவிடும். சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆட்டோமெட்டிக்காக லாக் ஆவது தாமதமாகியிருக்கிறது. அந்த தாமதமான நிலையில், சிலர் பார்த்து அதை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் எப்.ஐ.ஆர். வெளிவந்திருக்கலாம்.
இரண்டாவது, எந்த எப்.ஐ.ஆரை பதிவு செய்தாலும், புகார்தாரருக்கு ஒரு காப்பி கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பிரதி கொடுத்தோம். இந்த இரண்டு வழிகளில்தான் எப்.ஐ.ஆர். வெளியே வந்திருக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர். வெளியே வந்திருக்கக்கூடாது. அவ்வாறு வெளியிடுவது சட்டப்படி குற்றம். அதேபோல், அதை எடுத்துவைத்து விவாதிப்பதும் சட்டப்படி குற்றம்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளம் எந்த வகையிலும் வெளியே தெரியக் கூடாது. நாம் கொடுக்கும் தகவல்களை வைத்தே பாதிக்கப்பட்ட நபரை கண்டுபிடிக்க முடியும் என்ற அளவுக்கு தகவல் தெரிவித்தாலே அதுவும் தவறு. எனவே, இந்த எப்.ஐ.ஆர். வெளியானது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும், யார் இதை கசியவிட்டார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புலன் விசாரணையை வெளியில் சொல்லக்கூடாது இருந்தாலும், இதை நிறைய பேர் அரசியல் பண்ணுவதால் சொல்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை நடந்த புலன் விசாரணையில், ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வேறுஒருவரிடம் பேசியதாகக் கூறுவது தவறு. குற்றம் நடக்கும்போது ஞானசேகரனின் மொபைல் Airplane modeல் இருந்துள்ளது; குற்றவாளி யாரிடமும் போனில் 'சார்' எனப் பேசவில்லை. மிரட்டுவதற்காக அப்படிச் சொல்லியுள்ளார்.
ஞானசேகரன் மீது சென்னையில் 2013-ல் இருந்து 20 வழக்குகள் உள்ளன. இந்த அனைத்து வழக்குகளும் திருட்டு போன்ற வழக்குகள்தான். அவர் மீது ரவுடியிசம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இல்லை. அந்த 20 வழக்குகளில் 6-ல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இதுவரை கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனால் பாதிக்கப்பட்டதாக வேறு எந்த பெண்களிடத்தில் இருந்தும் காவல் துறைக்கு புகார் வரவில்லை. ஞானசேகரனை கஸ்டடியில் எடுத்து விசாரித்து, போன் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் புகார்கள் பெறப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இதில் 56 சிசிடிவி வேலை செய்கிறது. அதிலிருந்து ஆதாரங்கள் கிடைத்தன. இந்த வழக்கைப் பொறுத்தவரை மாலை 4 மணிக்கு புகார் அளித்தனர். அதிலிருந்து அடுத்த நாளுக்குள் எப்.ஐ.ஆர். பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டது ஏன்? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "போராட்டம் நடத்துவதற்கு என சில இடங்கள் உள்ளது, அதை மீறி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்" என்று காவல் ஆணையர் அருண் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாணவியின் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. யார் பாதிக்கப்பட்டாலும் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும்" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.