< Back
மாநில செய்திகள்
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதாக பரவும் தகவல் தவறானது - அமைச்சர் அன்பில் மகேஸ்
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதாக பரவும் தகவல் தவறானது - அமைச்சர் அன்பில் மகேஸ்

தினத்தந்தி
|
2 Jan 2025 1:27 PM IST

அரசுப் பள்ளி விவகாரத்தில் எனது தரப்பு விளக்கங்களை கேட்காமல் கண்டனம் தெரிவிக்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

சென்னை,

500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதாக பரவும் தகவல் தவறானது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:-

அரசுப் பள்ளிகளை தாரை வார்க்கிறோம் என்று பரவும் தகவல் தவறானது. அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளைகள்; அதை யாரும் தத்து கொடுக்கவில்லை. தவறுதலாக புரிந்து கொண்டு தாரை வார்ப்பு என விமர்சனங்கள் செய்கின்றனர். செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுகின்றனர்.

அரசுப் பள்ளி விவகாரத்தில் எனது தரப்பு விளக்கங்களை கேட்காமல், தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பி, அவசர அவசரமாக கண்டனம் தெரிவிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிக்கிறேன். சிஎஸ்ஆர் நிதி மூலம் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் முன்வந்தன. அரசுப் பள்ளிகளை தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசு நிதி கொடுக்காமல் கழுத்தை நெரிக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். எங்கள் கொள்கைகளில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி விடுங்கள்; எங்கள் பிள்ளைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்