'தி.மு.க. ஆட்சியில் கட்டி கொடுக்கப்படும் வீடுகள் தரமானதாக இருக்கும்' - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
|தி.மு.க. ஆட்சியில் கட்டி கொடுக்கப்படும் வீடுகள் தரமானதாக இருக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை வாழைத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் இடப்பிரச்னை காரணமாக காலதாமதம் ஆனதாகவும், புதிதாக கட்டப்பட்ட 504 வீடுகள் பொங்களுக்கு முன்பாக பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தி.மு.க. ஆட்சியில் கட்டி கொடுக்கப்படும் வீடுகள் சுமார் ஐம்பது, அறுபது வருடங்கள் வரை தாங்கக் கூடிய வகையில், தரமானதாக இருக்கும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 1970-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது அதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக மாற்றியிருக்கிறோம்.
இந்த திட்டத்தின்படி பட்டினப்பாக்கத்தில் வீடுகள் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும் அது கடற்கரை அருகே உள்ளது. அங்கு இடிந்து விழுந்தது பழைய வீடு. பழுதான நிலையில் சென்னையில் மட்டும் சுமார் 27 ஆயிரம் வீடுகள் உள்ளன. அதோடு பிற மாவட்டங்களில் சுமார் 3 ஆயிரம் வீடுகள் உள்ளன.
இந்த 30 ஆயிரம் வீடுகளையும் படிப்படியாக இடித்துவிட்டு, அந்தந்த வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு அதே இடத்தில் வீடு கட்டி தர வேண்டும் என முதல்-அமைச்சர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. மேலும் தற்போது கட்டப்படும் வீடுகள் 400 சதுர அடிக்கு மேல் கட்டப்படுகின்றன."
இவ்வாறு தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.