< Back
மாநில செய்திகள்
மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரசு முடங்கிக் கிடக்கிறது - அன்புமணி ராமதாஸ்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரசு முடங்கிக் கிடக்கிறது - அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
5 Dec 2024 2:44 PM IST

மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க முடியாத நிலையில்தான் தமிழக அரசு செயல்படுகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை பல்லாவரம் பகுதியில் 30 பேர் வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுடன் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் திருவீதி, மோகன்ராஜ் ஆகிய இருவர் மருத்துவம் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவீதி, மோகன்ராஜ் ஆகிய இருவரின் மரணத்திற்கும், மற்றவர்களின் உடல்நல பாதிப்புகளுக்கும் அப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதுதான் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சென்னையை ஒட்டியுள்ள பல்லாவரம், தாம்பரத்துடன் இணைத்து மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்குக்கூட பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க முடியாத நிலையில்தான் தமிழக அரசு செயல்படுகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது.

கழிவு நீர் கலந்த குடிநீரை அருந்தியதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தரமான மருத்துவம் அளிப்பதுடன், தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்