நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம்
|நண்பர்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அவரின் இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,
மூத்த நடிகர் டெல்லி கணேஷ், வயது முதிர்வு மற்றும் உடல்நல பிரச்சினைகள் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற விமானப்படை வீரர்கள், டெல்லி கணேஷ் உடல் மீது தேசியக்கொடி போர்த்தியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி கணேஷ், இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து டெல்லி கனேஷின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அவரின் இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.