< Back
மாநில செய்திகள்
சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது: முதல்-அமைச்சர் பேச்சு
மாநில செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது: முதல்-அமைச்சர் பேச்சு

தினத்தந்தி
|
23 Dec 2024 7:33 PM IST

சமத்துவத்தைப் போற்றுவதுதான் திராவிட மாடல் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை டான் போஸ்கோ பள்ளியில் நடைபெற்று வரும் கிறிஸ்துமஸ் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய அவர் கூறியதாவது:-

சமத்துவத்தை போற்றுவதுதான் திராவிட மாடல். எந்த மதமாக இருந்தாலும் அது அன்பை, சகோதரத்துவத்தை போதிக்க வேண்டும். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில். இறைவனை வேண்டுவது அவரவர் விருப்பம்; பாகுபாடு எதிலும் நிலவக்கூடாது.

37 தேவாலயங்களை புனரமைக்க ரூ.1.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் புனித பயணம் செல்வோருக்கு ரூ.37 ஆயிரம் நிதி நேரடியாக வழங்கப்படுகிறது. நாள்தோறும் நலத்திட்டங்கள், திறப்பு விழாக்கள் என அரசு பல திட்டங்களை நிறைவேற்றுகிறது. நலத்திட்டங்களை நிறைவேற்றுவதால்தான் மக்கள் நல அரசாக தி.மு.க. அரசு திகழ்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நின்றது தி.மு.க. அதை ஆதரித்தது அ.தி.மு.க. சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதனால்தான் தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் சிறுபான்மை அரசாக்கி இருக்கிறார்கள். வெறுப்பு அரசியலைக் கண்டு அஞ்சக் கூடாது. சகோதரர் என்ற உணர்வோடு உங்களுக்கு துணையாக நாங்கள் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்