< Back
தமிழக செய்திகள்
சமூக நீதி விவகாரத்தில் தி.மு.க. அரசால் இனியும் ஏமாற்ற முடியாது - அன்புமணி ராமதாஸ்

கோப்புப்படம் 

சென்னை
தமிழக செய்திகள்

சமூக நீதி விவகாரத்தில் தி.மு.க. அரசால் இனியும் ஏமாற்ற முடியாது - அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
20 March 2025 1:35 PM IST

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து எந்த விளக்கமும் பெறாமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.

மாநில அளவில் பல்வேறு சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்காக அந்த சமூகங்களின் பின்தங்கிய நிலைமை குறித்த நிகழ்கால, பொருத்தமான தரவுகளைத் திரட்ட 2008-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா? என நாடாளுமன்ற மக்களவையில் நான் வினா எழுப்பியிருந்தேன். அதற்கு விடையளித்த மத்திய சமூகநீதித்துறை இணை மந்திரி பி.எல் வர்மா, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

2008-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும், அதனடிப்படையில் தான் பீகார், தெலுங்கானா, கர்நாடகம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளன என்றும், அதேபோல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சில தருணங்களிலும், அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் பட்டால் அதன் விவரங்கள் ஏற்கப்படுமா? என்பது தெரியாது என சில தருணங்களிலும் கூறி வருகிறது.

தமிழ்நாடு அரசு எந்த அடிப்படையில் இப்படி ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தது என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. 2008-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். அந்த சட்டத்தின்படி எந்த வகையான புள்ளிவிவரங்களையும் சேகரிக்க முடியும்; அதனடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியும் என்று அந்த சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதையும் கடந்து தமிழக அரசுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம்.

ஆனால், மத்திய அரசிடம் அவ்வாறு எந்த விளக்கத்தையுமே பெறாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். 2008-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று அவருக்கு யார் கூறினார்? எனத் தெரியவில்லை.

மத்திய அரசிடமிருந்து எந்த விளக்கமும் பெறாமல் தமிழக அரசுக்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் இல்லை என்று கூறுவதன் மூலம் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற அக்கறையோ, விருப்பமோ இல்லை என்பது தெளிவாகிறது; மத்திய அரசின் மீது பழியைப் போட்டு மக்களை ஏமாற்றலாம் என்பது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டமாக இருக்கிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் தீர்ப்பளித்துள்ளன. மத்திய அரசின் சட்டமும் தெளிவாக உள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற அக்கறை தி.மு.க. அரசுக்கு இருந்திருந்தால், கூடுதல் தெளிவுக்காக மத்திய அரசிடமும் விளக்கம் கேட்டு, அதனடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்கலாம். ஆனால் அதை செய்யாததன் மூலம் தி.மு.க. அரசின் சமூகநீதி முகமூடி கிழிந்து விட்டது.

சமூக நீதி விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை தி.மு.க. அரசால் இனியும் ஏமாற்ற முடியாது. எனவே, பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களைப் பின்பற்றி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்