< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மருத்துவமனையை இடக்குறைப்பு செய்யும் முடிவினை கைவிட வேண்டும் - சீமான்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மருத்துவமனையை இடக்குறைப்பு செய்யும் முடிவினை கைவிட வேண்டும் - சீமான்

தினத்தந்தி
|
10 Nov 2024 7:10 PM IST

மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மருத்துவமனையை இடக்குறைப்பு செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மருத்துவமனையை இடக்குறைப்பு செய்யும் முடிவினை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில்தான் சென்னை மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவிலிருந்து 1960களின் பிற்பகுதியில் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு துறையாக உருவாக்கப்பட்டு, 1979-ம் ஆண்டு முதல் கே.கே.நகரில் புனர்வாழ்வு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் இந்திய நாட்டிலேயே அரசு நடத்துகின்ற ஒரே செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மையம் மற்றும் இயன்முறை சிகிச்சைக்கான அரசுக் கல்லூரியும் இம்மருத்துவமனை வளாகத்திலேயே செயல்பட்டு வருகின்றது.

அத்தகைய சிறப்பு மிக்க கே.கே.நகர் மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலனடைந்துள்ளனர். தற்போதும் பலர் கழுத்து, கை, கால், முதுகுவலிக்கு மருத்துவம் பெறவும், இயன்முறை மருத்துவம் பெறவும், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெறவும் இம்மருத்துவமனையின் புறநோயாளி மருத்துவப்பிரிவுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.

மேலும் உள்நோயாளிகள் பிரிவில் பக்கவாதம், முதுகு தண்டுவட பாதிப்பு சிகிச்சைக்காகவும் மற்றும் உறுப்புகள் துண்டிக்கப்பட்டோர் பகுதியில் செயற்கை கை, கால்கள் பொருத்தவும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இங்கு உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு பிரிவின்கீழ் ஆண்டுதோறும் 5 முதுநிலை மருத்துவ மாணவர்கள் மூன்றாண்டு பட்டயப்படிப்பு பயின்று வருவதோடு, இயன்முறை பயிற்சி கல்லூரியில் 25 மாணவர்களும், செயற்கை உறுப்புகள் மற்றும் முடநீக்கியல் பயிலகத்தில் 25 மாணவர்களும் ஆண்டுதோறும் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு புனர்வாழ்வு மையத்தை இடக்குறைப்பு செய்து அந்த இடத்தில் மதியிறுக்கத்தால் (ஆட்டிஸம்) பாதிக்கப்பட்டோர்க்கான சிறப்பு மருத்துவமனை நிறுவ திட்டமிட்டுள்ளதால், தற்போது அங்கு மருத்துவம் பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற நோயாளிகள் அதிர்ச்சிக்கும், மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். பல ஆண்டுகளாக எளிதாக மருத்துவமும், இயன்முறை பயிற்சியும் பெறும் வகையில் தரைதளத்தில் செயல்பட்ட புனர்வாழ்வு மையத்தை மதியிறுக்க (ஆட்டிஸம்) மருத்துவமனையாக மாற்ற முயல்வது ஏற்புடையதல்ல. மதியிறுக்கத்தால் (ஆட்டிஸம்) பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்க வேண்டியதும் மிகவும் இன்றியமையாத தேவைதான் என்றாலும், அதற்காக தற்போது செயல்பட்டுவரும் அரசு புனர்வாழ்வு மையத்தை இடக்குறைப்பு செய்து அங்கு மருத்துவம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற நோயாளிகளுக்கும் குந்தகம் விளைவிப்பது என்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

கடந்த 27-01-2023 அன்று, புனர்வாழ்வுக்கான ஒப்புயர்வு மையமாக இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு தமிழக முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், தரத்தை உயர்த்திவிட்டு இடத்தை குறைப்பது எவ்வகையில் நியாயமாகும்? ஆகவே, தமிழ்நாடு அரசு சென்னை கே.கே.நகரில் செயல்பட்டுவரும் புனர்வாழ்வு மையத்தை இடக்குறைப்பு செய்யும் முடிவை கைவிட்டு, (மதியிறுக்கத்தால்) ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவினை இட நெருக்கடியற்ற, தகுதி வாய்ந்த வேறு இடத்தில் அமைக்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்