புயல் பாதிப்பை சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு முதல்-அமைச்சர் நன்றி
|சேதங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
பெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில் புயல் பாதிப்பை சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள செய்யூர், மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு வெள்ளச்சேதம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன்.
நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகளை வழங்கியதோடு, வீடுகள் சேதம், கால்நடை இறப்பு, பயிர்ச்சேதம் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையைச் சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், அத்தியாவசியச் சேவைகளை மீட்டெடுத்து வரும் மின்சாரத் துறை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, முக்கியமாகப் பேரிடர் தடுப்புப் படைப் பிரிவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளும், நன்றியும்!" என்று தெரிவித்துள்ளார்.