< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர் ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
மாநில செய்திகள்

தஞ்சாவூர் ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

தினத்தந்தி
|
20 Nov 2024 8:22 PM IST

பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகவும் மிருகத்தனமானது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 25) த/பெ.முத்து அவர்கள் இன்று (20:11.2024) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும். சக ஆசிரியர்களுக்கும். மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். செல்வி ரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள். சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, செல்வி ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்