< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை - தலைவர்கள் கண்டனம்
மாநில செய்திகள்

தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை - தலைவர்கள் கண்டனம்

தினத்தந்தி
|
20 Nov 2024 1:48 PM IST

தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தஞ்சை அரசுப் பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் இன்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் கூறுகையில், "ரமணியை கொலை செய்த மதன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை ரமணியை கொன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளர். அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில், "தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

தி.மு.க. ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறி உள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு டாக்டர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ஆசிரியர் ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தி.மு.க. முதல்-அமைச்சர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்," என்று பதிவிட்டுள்ளார்.

டி.டி.வி. தினகரன்

இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைதளத்தில், "தஞ்சாவூரில் அரசுப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியை குத்திக் கொலை - தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பது எப்போது ?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

அண்மையில் கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி மீதான தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நடந்திருக்கும் இந்த கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், டாக்டர்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியிருக்கும் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது .

எனவே, இனியாவது விழித்து தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்