< Back
மாநில செய்திகள்
தென்காசி: கடனாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து  தண்ணீர் திறப்பு
மாநில செய்திகள்

தென்காசி: கடனாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
30 Dec 2024 6:40 PM IST

நாளை முதல் 91 நாட்களுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்காசி,

பிசான சாகுபடிக்காக கடனாநதி, அடவிநயினார், கருப்பாநதி ஆகிய அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

1. தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினை கருத்தில் கொண்டு மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பிளிகால், புங்கன்கால், சாம்பவர் வடகரை கால்வாய் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் நிலங்களுக்கு 1434-ம் பசலி பிசான சாகுபடி செய்வதற்கு அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து 31.12.2024 முதல் 31.03.2025 வரையிலான 91 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தென்காசி மாவட்டம், செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களில் உள்ள மொத்தம் 7643.15 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

2. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினை கருத்தில் கொண்டு, பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைகால், கிளாங்காடுகால் மற்றும் ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு 1434-ம் பசலி பிசான பருவ சாகுபடி செய்வதற்கு கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 31.12.2024 முதல் 31.03.2025 வரையிலான 91 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 25 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் உள்ள மொத்தம் 9,514.70 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

3. தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், சிவசைலம் கிராமத்தில் உள்ள கடனா நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினை கருத்தில் கொண்டு, அரசபத்து, வடகுறுவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர்கால் மற்றும் காங்கேயன்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு 1434-ம் பசலி பிசான பருவ சாகுபடி செய்வதற்கு கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து 31.12.2024 முதல் 31.03.2025 வரையிலான 91 நாட்களுக்கு நீர்இருப்பை பொறுத்து வினாடிக்கு 125 கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம். அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் சேரன்மகாதேவி வட்டங்களில் உள்ள மொத்தம் 9923.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்