சென்னையில் மழைநீர் வடிகால் பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
|சென்னையில் மழைநீர் வடிகால் பணியின்போது மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.
சென்னை,
சென்னை மயிலாப்பூர், வீரபெருமாள் கோவில் தெருவில் கடந்த சில மாதங்களாக மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் 5-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் மழைநீர் வடிகால்வாய் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மிலன்தாஸ் (வயது 19) என்பவர் சென்டிரிங் அமைப்பதற்காக இரும்பு கம்பிகளை வெல்டிங் எந்திரம் மூலம் துண்டிக்கும் பணியை செய்துகொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் மயங்கி விழுந்த அவரை சக பணியாளா்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மிலன்தாஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.