வால்பாறையில் சிறுமியை கடித்துக் கொன்ற சிறுத்தையை பிடிக்க குழு அமைப்பு
|சிறுத்தை கடித்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை,
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அணுல் அன்சாரி. இவர் கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அணுல் அன்சாரியின் மகள் அப்சரா. 6 வயதான சிறுமி, அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தனது தாயுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கே பதுங்கி இருந்த சிறுத்தை, திடீரென சிறுமி அப்சராவை கடித்து இழுத்துச்சென்றது. இதைக்கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியில் உறைந்துபோனார். சிறுத்தை கடித்ததில் சிறுமி அப்சரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த காவல் மற்றும் வனத்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சிறுமியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.