
பண்ணை குட்டையில் மூழ்கி ஆசிரியர், மாணவன் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

பண்ணை குட்டையில் மூழ்கி ஆசிரியர், மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் (வயது 8) த/பெ. மணிகண்டன் என்பவர் இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில், உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலைமையாசிரியர் கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.