மதுபோதையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பணி நீக்கம்
|எடப்பாடி அருகே மதுபோதையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரன் மதுபோதையில், சிறப்பு வகுப்புக்கு வந்திருந்த ஒரு மாணவியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வகுப்பு முடிந்து வீடு திரும்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் செய்தனர்.
அந்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார், ஆசிரியர் பிரகதீஸ்வரனை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தற்காலிக தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரன் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் தற்காலிக ஆசிரியர் என்பதால் இருப்பாளி அரசு உயர்நிலைப்பள்ளியின் மேலாண்மைக்குழுவில் முடிவு செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.