5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது
|5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர்,
அரியலூர் வடக்கு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவிக்கு கடந்த 7-ந்தேதியன்று ராஜீவ்காந்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து மறுநாள் மதிய உணவு இடைவேளை முடிந்துள்ளது. அப்போது அந்த மாணவியிடம், தனது டிபன் பாக்சை ஆசிரியர் அறையில் வைக்குமாறு ராஜீவ்காந்தி கொடுத்துள்ளார். அதனை அந்த மாணவி பெற்றுச்சென்ற நிலையில், பின்னால் சென்ற ராஜீவ்காந்தி, ஆசிரியர் அறையில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாணவியிடம், இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி அதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், மாணவியின் நெஞ்சுப்பகுதியில் காயம் இருந்ததை பார்த்த அவரது தாய், இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த மாணவி தன்னிடம் ஆசிரியர் அத்துமீறி நடந்து கொண்டது குறித்தும், பாலியல் பலாத்காரம் செய்தது குறித்தும் தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், இதுகுறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.