மோட்டார் சைக்கிளில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து டீக்கடைக்காரர் சாவு
|கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றுள்ளார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி அண்ணா காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). இவர் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் டீக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது வாகனத்தின் முன்பகுதியில் பதுங்கி இருந்த பாம்பு, வெங்கடேசனை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.