
இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக தபன் ஷர்மா பதவியேற்பு

இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை,
இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் சர்மா நேற்று பொறுப்பேற்றார். ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த நிலைய கமாண்டிங் அதிகாரி ஏர் கமடோர் ரதீஷ்குமாரிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதையொட்டி அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
ஏர் கமடோர் தபன் சர்மா 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய விமானப்படையில் போர் விமானியாக பணியில் இணைந்தார். அவர் 'ஏ' தர நிலை கொண்ட விமான பைலட் பயிற்றுவிப்பாளர் ஆவார். தேசிய பாதுகாப்பு அகாடமி, வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சேவை கல்லூரி ஆகியவற்றில் அவர் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான பல்வேறு வகை விமானங்களை 2 ஆயிரத்து 500 மணி நேரத்திற்கும் மேலாக இயக்கி சிறந்த அனுபவம் பெற்றவர். தமது 25 ஆண்டு கால அனுபவத்தின்போது அவர் இந்திய விமானப்படையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளார். விமானப்படை விமானப்பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றுக்கு தலைமை வகித்து உள்ளார் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.