மாநில செய்திகள்
கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு கசிந்ததால் பரபரப்பு
மாநில செய்திகள்

கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு கசிந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
3 Jan 2025 7:52 AM IST

கோவை அவினாசி மேம்பாலம் அருகே எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை,

கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி இன்று அதிகாலை 3 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருந்த எரிவாயு கசிந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை கொடுத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் பொறியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேம்பாலம் என்பதால் விபத்து நடந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் எதுவும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு லாரியிலிருந்து கசிந்த எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்த மீட்பு பணிகளையடுத்து தற்போது கசிவு தடுக்கப்பட்டுள்ளது.

ரசாயன மூலப்பொருட்களை கொண்டு எரிவாயு கசிவை கட்டுப்படுத்திய நிலையில் லாரியை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக திருச்சியில் இருந்து வாகனம் வரவழைக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்