
ராணிப்பேட்டை
தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம்: அமித்ஷா உறுதி

தமிழுக்கு எப்போதும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
ராணிப்பேட்டை,
மத்திய ஆயுத போலீஸ் படைப்பிரிவில் மத்திய தொழிற்பாதுகாப்புப்படையும் ஒன்றாகும். இந்த பாதுகாப்புப்படை நாட்டின் முக்கிய அரசு, தனியார் அமைப்புகள், நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், மத்திய தொழிற்பாதுகாப்புப்படையின் 56வது ஆண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ராஜாதித்யன் சோழன் மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பயிற்சி மையத்தில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தொழிற்பாதுகாப்புப்படையினரின் அணிவகுப்பை அமித்ஷா ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் கற்பிக்க மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
மத்திய அரசு நடத்தும் மத்திய ஆயுதக் காவல் படை தேர்வுகளில் தமிழுக்கு இதுவரை இடம் இல்லாமல் இருந்தது. தற்போது இத்தேர்வை பெங்காலி, கன்னடம், தமிழ் மற்றும் பிற தாய்மொழிகளில் எழுத பிரதமர் மோடி வழிவகை செய்துள்ளார். நாட்டில் சீரான போக்குவரத்து, பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதில் சிஐஎஸ்எப் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.