கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: 3 மாதங்களுக்குள் நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்
|தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை,
பெண்களின் வாழ்க்கை தரம் மேம்படவும், சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையிலும் தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் 1 கோடி பேருக்கும் கூடுதலான பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடையும் வகையில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் பேசிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பயன்பெறாதவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுப்போம்.
திட்ட விதிக்கு உட்பட்டு கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என துணை முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.