< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டு கோவில்கள் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்காக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைப்பு
மாநில செய்திகள்

தமிழ்நாட்டு கோவில்கள் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்காக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைப்பு

தினத்தந்தி
|
23 Nov 2024 3:45 PM IST

தமிழ்நாட்டு திருக்கோவில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்காக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (23.11.2024) சென்னை, பாடி, அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோவில் வளாகத்தில் தமிழ்நாட்டு திருக்கோவில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக, 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 2,000 பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலையணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி புனித யாத்திரையாக சென்று வருகின்றனர். அந்த பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டு திருக்கோவில்கள் சார்பில் கடந்த ஆண்டு 10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் இன்றைய தினம் முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 2,000 பிளாஸ்க்குகள் 3 கண்டெய்னர் லாரிகள் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;-

"சபரிமலை அருள்மிகு அய்யப்பன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை 41 நாட்களும், மகர விளக்கு பூஜை 21 நாட்களும் நடைபெறுகின்றது. சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வதற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்வதை அனைவரும் அறிவீர்கள். சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டும் செய்து வருகின்றன.

தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, இந்து சமய அறநிலையத்துறை, அய்யப்ப சுவாமி பக்தர்களுக்கு உதவிடும் வகையில் தலைமையிடத்தில் 24 மணி நேரமும் செயல்படுகின்ற தகவல் மையத்தை அமைத்துள்ளது. மேலும் துறையின் சார்பில் சபரிமலையில் பக்தர்களுக்கு வழிகாட்டுகின்ற விதமாக கண்காணிப்பாளர் நிலையிலான அலுவலர்கள் இருவரை பணியமர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்த்திகை மாதத்தில் அய்யப்பன் மலர் வழிபாடு நடத்தப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சென்று வந்த குருசாமிகளை கவுரவிக்கின்ற வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, அய்யப்பன் உருவம் பொறித்த வெள்ளி டாலருடன் கூடிய துளசி மாலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான அய்யப்பன் மலர் வழிபாடு வருகின்ற 25ஆம் தேதி மயிலாப்பூரில் நடைபெற இருக்கிறது. சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவிடும் வகையில் கடந்த ஆண்டு அங்கிருந்து வரப்பெற்ற கோரிக்கையின்படி 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. அதைப்போலவே இந்த ஆண்டும் முதற்கட்டமாக இன்றைய தினம் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும், 2000 ஒரு லிட்டர் மில்டன் பிளாஸ்க்குகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள திருக்கோவில்களுக்கும், வெளி மாநிலத்திலுள்ள திருக்கோவில்களுக்கும் நம்முடைய மாநிலத்தை சேர்ந்தவர்கள் செல்கின்றபோது அவர்களின் தேவைகளையும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்கிறது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு ஒரு சான்றாகும். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சபரிமலையில் பக்தர்களுக்கான விடுதி கட்டுவதற்கு இடம் கோரி கேரள அரசிற்கு துறையின் சார்பில் ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு, தங்கும் விடுதி கட்டிட தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும், திருப்பதியில் பக்தர்களுக்கான தங்கும் விடுதியை விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் திருக்கோவிலில் அன்றைய தினம் யானையோடு செல்பி எடுக்க முயன்றபோது அந்த யானை அதற்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அவர் முயற்சி செய்தபோது இந்த விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவம் நடந்த பத்து நிமிடங்களுக்குள்ளாகவே அந்த யானை மீண்டும் பாகன் மீது வைத்திருந்த பாசத்திற்காக அவனை தட்டி தட்டி எழுப்புகின்றது. எதிர்பாராதவிதமாக, கோபத்தால் ஏற்பட்ட விளைவாகதான் இதை பார்க்கின்றோம். அதன் பிறகு மீண்டும் குளியலுக்கு கொண்டு சென்றபோது அந்த யானை மீண்டும் ஆனந்தமாக குளிக்கின்றது. ஆகவே வருங்காலங்களில் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நடைபெறாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிச்சயமாக எடுப்போம்.

27 திருக்கோயில்களில் 28 யானைகள் இருக்கின்றன. அவற்றிக்கு குளியல் தொட்டிகள், 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை, தேவையான உணவுகள், நடைபயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வருகின்றன. யானைகளை தெய்வத்திற்கு நிகராக தான் தினமும் பாதுகாத்து வருகின்றோம். இப்படிப்பட்ட ஒரு துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தை பதிவு செய்கிறது. அந்த நிகழ்வில் உயிரிழந்த பாகனின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சமும், மற்றொரு நபரின் குடும்பத்திற்கு ரூபாய் இரண்டரை லட்சமும் நிதி உதவியாக திருக்கோவில் சார்பில் வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்."

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்