பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை: அமைச்சர் கீதாஜீவன்
|பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதால்தான் தமிழ்நாட்டில் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்கிறவர்களாகவும், வேலைக்குச் செல்பவர்களாகவும், சுயமானவர்களாகவும் உள்ளனர். இந்தியாவில் உற்பத்தித்துறையில் உள்ள பெண்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் - அதாவது 43சதவீதம் பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 1973-ம் ஆண்டு பெண்களை முதன்முதலாகக் காவல்துறையில் இணைத்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக காவல்நிலையங்களை திறந்துவருகிறார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 241 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், 32 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுகள், 7 புலன் விசாரணைப் பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுகள் மற்றும் 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சிறார்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கு மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 194 சிறார் நட்பு அறைகள் மற்றும்
1,542 குழந்தைகள் நல காவல் அலுவலர்களும் செயல்பட்டு வருகின்றனர். மாநில அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பொருட்டுத் தடுப்புப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அப்பிரிவு ஒரு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் இயங்கி வருகிறது. அதேபோல 'ப்ராஜக்ட் பள்ளிக்கூடம்' திட்டம், 'இமைகள் திட்டம்' ஆகியவற்றின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விரைவான நீதி கிடைக்க அரசு செயலாற்றி வருகிறது.
மேலும் பெண்களுக்கு உதவும் வகையில் அவர்கள் விரைவாக தங்களது புகார்களை விரைவாக பதிவு செய்ய 'காவல் உதவி' செயலி முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதே போல பெண்கள் உதவி மைய எண் 181, மற்றும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098 ஆகியவை மிகச்சிறப்பாக செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலமும் பதிவு செய்யப்படும் குற்றங்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, காவல்துறை ஆகிய மூன்று துறைகளும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் நடத்தி வருகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது.
பெண்களின் சமூக வாழ்வை உயர்த்துவதற்கான 'விடியல் பயணம்', 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' போன்ற நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைத் தடுப்பதை அரசின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயலாற்றுகிறது திராவிட மாடல் அரசு. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது. அதனால்தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.