< Back
மாநில செய்திகள்
ஒரே மொழி, ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

ஒரே மொழி, ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி

தினத்தந்தி
|
2 Nov 2024 11:52 PM IST

இந்தியாவில் மாநில மொழிகள் உயிர்ப்புடன் இருக்க காரணமே திராவிட இயக்கம்தான் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கலை இலக்கிய திருவிழா நடந்து வருகிறது. இதில் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திராவிட அரசியலில் கலை மற்றும் கலாசாரத்தின் எதிரொலி என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவும், தமிழ்நாடும் பண்டைய காலம் முதலே நெருங்கிய தொடர்பு கொண்ட மாநிலங்கள். நாட்டில் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், பாசிசத்துக்கு எதிராகவும் போராடுவதில் தமிழ்நாடும், கேரளாவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக திகழ்கின்றன. தமிழ் மரபின் தனி அடையாளங்களாக திராவிட இயக்கங்கள் விளங்குகின்றன.

சமூக மாற்றத்திற்கான ஆயுதங்களாக மொழி மற்றும் கலைகளை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்துக்கொண்டன. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கங்கள் நகமும், சதையுமாக போராடின. இந்தியாவில் உள்ள மொழிவாரி மாநிலங்களில் பிராந்திய மொழிகளுக்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தின. இதற்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்தது.

இந்தியாவில் மாநில மொழிகள் உயிர்ப்புடன் இருக்க காரணமே திராவிட இயக்கம்தான். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி திணிப்புக்கு தான் எதிரானவர்கள். பா.ஜ.க.வின் ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும்.

கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் தங்கள் கலாசாரங்களை உயர்த்தி பிடித்து, பெருமை மிகு மாநிலங்களாகவே தனித்தன்மையுடன் இன்றும் விளங்குகிறது. நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க, அவற்றை உயர்த்தி பிடிக்க நாம் ஒன்றாக நின்று செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்