பல்கலைக்கழகங்கள் மூலம் மாநில தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ்
|ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக மாநில தகுதித் தேர்வை நடத்துவது அபத்தம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான மாநிலத் தகுதித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தகுதித் தேர்வை நடத்துவதற்கான எந்த திறனும், கட்டமைப்பும் இல்லாத ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்படுவது அபத்தம் ஆகும். இது அறிவார்ந்த முடிவல்ல.
தகுதித் தேர்வுகளை நடத்துவது மிகவும் சிக்கலானதும், கடினமானதும் ஆகும். அதுமட்டுமின்றி, இது தேர்வாணையம் சார்ந்த பணி அல்ல, மாறாக கல்வி சார்ந்த பணி ஆகும். பாடத்திட்டம், குறிப்பு நூல்களின் பட்டியல், வினாத்தாள்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்கான கட்டமைப்பின் சிறு பகுதி கூட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இல்லை. அடிப்படைப் பணிகளைச் செய்வதற்கே தடுமாறும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் மாநிலத் தகுதித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டால், தேவையற்ற குழப்பங்களும், காலதாமதங்களும் தான் ஏற்படும்.
தமிழக அரசு திட்டமிட்டுள்ளவாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் தான் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றால் இன்னும் ஓராண்டுக்கு அத்தேர்வு நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. அதனால், உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வுகளும், நியமனமும் தாமதமாகும். இது உயர்கல்வியைக் கடுமையாக பாதிக்கும். ஒருவேளை இத்தகைய சூழல் ஏற்படுவதைத் தான் அரசு விரும்புகிறதா? எனத் தெரியவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தகுதித் தேர்வை தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் உறுப்பினர், செயலாளர் கண்காணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ.ஆ.ப. அதிகாரி ஒருவர் தலைமையிலான அமைப்பால் நடத்தப்படும் தேர்வை இணைப் பேராசிரியர் நிலையிலான உறுப்பினர், செயலாளர் கண்காணித்தால் அதில் தேவையற்ற சிக்கல்கலும், மோதலும் ஏற்படும்.
இவை எதுவும் தகுதித் தேர்வு நியாயமாகவும், சிறப்பாகவும் நடைபெறுவதற்கு எந்த வகையிலும் உதவி செய்யாது. இவை அனைத்துக்கும் மேலாக, மாநிலத் தகுதித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளிக்காது. எனவே, பயனற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை விடுத்து பல்கலைக்கழகங்கள் வாயிலாக மாநிலத் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.