< Back
மாநில செய்திகள்
கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது - சீமான்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது - சீமான்

தினத்தந்தி
|
23 Dec 2024 4:47 PM IST

58 கிராம பாசனத் திட்டத்தினைச் சிதைக்கும் வகையில் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 58 கிராம பாசனத் திட்டத்தின் கால்வாயின் தொட்டிப் பாலத்திற்குச் சேதம் விளைவிக்கும் வகையில் கல்குவாரிகள் நடத்த தமிழ்நாடு அரசு ஆய்வுகளை மேற்கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

பெருமழைக் காலங்களில் வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது, ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்குச் செல்லும் வழியில், அமைந்துள்ள பல லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்குப் பயன்பட்டு பின்னர் வங்கக்கடலில் சென்று சேர்கிறது. ஆனால், அதன் மறுபுறம் அமைந்துள்ள உசிலம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியானது நெடுங்காலமாகக் குடிநீர் கூடக் கிடைக்காமல் வானம் பார்த்த பூமியாக வறண்டு கிடந்தது. அப்படி வறண்டு கிடந்த 58 கிராம மக்கள் ஒன்றுகூடி 1960-ம் ஆண்டு முதல் வைகை ஆறு பாயும் திருமங்கலம் கால்வாயை தங்கள் பகுதிக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தொடர்ப் போராட்டத்தின் விளைவாக அமைந்ததுதான் 58 கிராம பாசனத் திட்டமாகும். 1999-ம் ஒப்புதல் அளிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட கால்வாய் அமைக்கும் பணிகளானது தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கால் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2018-ம் ஆண்டு நிறைவடைந்து, செயல்பாட்டுக்கு வந்தது.

வைகை அணையின் வலதுகரைப் பகுதியிலுள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகிலிருந்து 28 கி.மீ. தூரம் அமைந்துள்ள முதன்மை கால்வாயானது, உத்தப்பநாயக்கனூரில் 12 கிமீ தூரம் இடப்பக்கமும், 11 கிமீ தூரம் வலப்பக்கமும் இரு கால்வாய்களாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாதைகளின் இடையில் மலைப்பகுதிகள் இருப்பதால், மூன்று இடங்களில் தொட்டிப் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வைகை நதி பாயும் 58 கிராம பாசனத் திட்டமானது உசிலம்பட்டி பகுதி சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதுடன், அப்பகுதியிலுள்ள ஏறத்தாழ 2,500 ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேலும், 58 கிராம பாசனத் திட்டத்தினைச் சீர்குலைக்கும் வகையில் தொட்டிப்பாலங்கள் அருகே இயங்கிவந்த கல்குவாரிகள், வேளாண் பெருங்குடி மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக வழக்குகள் தொடரப்பட்டு கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டன. இந்நிலையில் தொட்டிப்பாலங்கள் அமைந்துள்ள பகுதியில், மூடப்பட்ட கல்குவாரிகள் மீண்டும் செயல்படுவது குறித்து, தற்போது அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் அடங்கிய ஆய்வுக்குழு, பாறைகள் இடையே வெடி வைத்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.

மீண்டும் கல்குவாரி செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதித்தால் பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கும்போது ஏற்படும் அதிர்வில் தொட்டிப்பாலம் இடிந்து விழும் ஆபத்து உறுதியாக நிகழும். தொட்டிப்பாலம் அமைக்கவே 18 ஆண்டு காலத்தைச் செலவழித்த தமிழ்நாடு அரசு ஒரு நொடியில் அதனைத் தகர்க்க அனுமதிப்பது எவ்வகையில் நியாயமாகும்? 60 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற பாசனத் திட்டத்தைத் தகர்க்கும் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தி.மு.க. அரசு ஆய்வு மேற்கொள்வது அதன் எதேச்சதிகாரப்போக்கையே காட்டுகிறது.

ஆகவே, உசிலம்பட்டி பகுதி மக்கள் இரண்டு தலைமுறைக்கும் மேல் போராடி அரும்பாடுபட்டுப் பெற்ற 58 கிராம பாசனத் திட்டத்தினைச் சிதைக்கும் வகையில் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது, அதற்கென எவ்வித ஆய்வும் மேற்கொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்துகிறேன். கல்குவாரிகளுக்கு எதிராக உசிலம்பட்டி 58 கிராம பாசனப் பகுதி மக்கள் மேற்கொள்ளும் அறப்போராட்டக் கோரிக்கை வெல்லும்வரை நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்