< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தினத்தந்தி
|
29 Oct 2024 7:25 AM IST

தமிழகம் முழுவதும் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பதாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜனவரி 1-ந்தேதியை, புதிய வாக்காளராக தகுதி ஏற்படுத்தும் நாளாக (18 வயது பூர்த்திக்கான நாளாக) வைத்து புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு பழைய வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும்.

இந்த திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண்கள், 3 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண்கள், 8,465 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் இருந்தனர். அதில் உள்ள மாற்றங்கள் இன்று வெளியாகும் வரைவு பட்டியலில் தெரியும்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடங்கும். இந்தப் பணிகள் வரும் டிசம்பரில் முடிவடையும். திருத்தப் பணிகள் நடைபெறும் போது, வாக்காளர் அனைவரும் தங்கள் பெயர் விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை வரைவு பட்டியலை பார்த்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

வரும் ஜனவரி 1-ந் தேதிக்குள் 18 வயது பூர்த்தியாகக் கூடியவர்கள், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். முகவரி திருத்தம், பழைய முகவரியில் இருந்து பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை இந்த காலகட்டத்தில் எளிதாக மேற்கொள்ளலாம். அதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நவ. 16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

மேலும் செய்திகள்