குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
|குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காத மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் மாநில அரசுகளின் சார்பில் அனுப்பப்படும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி, 2025 குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அணிவகுப்பு நிகழ்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகத்தால் குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அ.தி.மு.க. ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு. ஆனால் தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன்.
மு.க.ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.