< Back
தமிழக செய்திகள்
தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது: சபாநாயகர் அப்பாவு
தமிழக செய்திகள்

தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது: சபாநாயகர் அப்பாவு

தினத்தந்தி
|
23 March 2025 1:29 PM IST

தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நெல்லை,

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. நிலப்பிரச்சினை, குடும்ப பிரச்சனை உள்ளிட்ட விரோதத்தின் காரணமாகவே கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே கணித்து நாடாளுமன்றம் மற்றும் அனைத்து கட்சி கூட்டம் என இந்த விவகாரத்தை பேசி அனைத்தையும் நடத்திக் காட்டி உள்ளார். இந்தியாவின் மீது அக்கறை கொண்ட தமிழக முதல்-அமைச்சர் கூட்டாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டு முன் யோசனையோடு செயல்படும் முதல்-அமைச்சரின் செயலை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே வரவேற்றுள்ளது. நிச்சயமாக தொகுதி மறு வரையறை பிரச்சினையில் நல்ல முடிவு வரும்.

சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு முழு அனுமதி கொடுத்து ஜனநாயக ரீதியில் வழிநடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் பாராமல் ஜனநாயக ரீதியில் சட்டசபை வழிநடத்தப்படுகிறது. தமிழக சட்டமன்றம் சட்ட விதிப்படி மரபுப்படி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்