நடத்தையில் சந்தேகம்: கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளி... அடுத்து நடந்த விபரீதம்
|இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி சத்யா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் இறந்து விட்டார். இதையடுத்து சத்யா தனது குழந்தைகளுடன் விழுப்புரம் அடுத்த அரகண்டநல்லூர் அருகே உள்ள மணம்பூண்டியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டு வேலை செய்து வந்த சத்யாவுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தலை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர்.
அப்போது சத்யாவின் நடத்தை மீது முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த முருகன் சத்யாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தொடர்ந்து அவர் காரில் அங்கிருந்து தப்பிச்சென்றார். திருக்கோவிலூர்- திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காரில் சென்றபோது, அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது.
இதில் காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்க முயன்றனர். அப்போது அவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகனை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.