< Back
மாநில செய்திகள்
துணை நடிகை மீனாவுக்கு 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
மாநில செய்திகள்

துணை நடிகை மீனாவுக்கு 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

தினத்தந்தி
|
10 Nov 2024 3:01 PM IST

போதைப் பொருளுடன் கைதான துணை நடிகை மீனாவுக்கு வரும் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ஒரு பெண் மெத்தபெட்டமைன் விற்பதாக அண்ணா சாலை போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில், அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து அவரது பையை சோதித்தனர். பையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் இருந்தது. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், அந்த இளம்பெண் கோவிலம்பாக்கம் அருகேயுள்ள வெள்ளக்கோயில் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த கா. எஸ்தா் (எ) மீனா (28) என்பதும், இலங்கையை பூா்விகமாகக் கொண்டவா் என்பதும் தெரியவந்தது. துணை நடிகை மீனா, தமிழ்த் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை தொடா்களில் நடித்து வருவதும், அவருக்கு ராயப்பேட்டையைச் சோ்ந்த ஜேம்ஸ் (27) என்பவா் மெத்தபெட்டமைன் வழங்கியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனர்.

அதேவேளையில், மீனா மூலம் திரைப்படக் கலைஞா்களுக்கு போதைப் பொருள் விற்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துணை நடிகை மீனாவுக்கு மெத்தபெட்டமைனை வழங்கியதாகக் கூறப்படும் ஜேம்ஸையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், துணை நடிகை மீனா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற காவலையடுத்து துணை நடிகை மீனா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்