வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - மெட்ரோ நிர்வாகம் அளித்த விளக்கம்
|சென்னை தி.நகரில் வீட்டின் தரைப்பகுதி உள்வாங்கிய சம்பவம் தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
சென்னை தி.நகர் அருகே மெட்ரோ சுரங்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு மாம்பலம் பகுதியில் உள்ள வீடு ஒன்று, மெட்ரோ சுரங்க பணி அதிக அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட இடத்தில் உள்வாங்கியது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை தி.நகரில் வீட்டின் தரைப்பகுதி உள்வாங்கிய சம்பவம் தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தொடர்ந்து செயல்படுகிறோம். கடினமான பாறை மற்றும் இலகுவான மண் போன்றவற்றால் இவ்வாறான சில நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
உள்வாங்கிய வீட்டின் பராமரிப்பு சீரமைப்பு பணிகளை முழுமையாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் மேற்கொள்ளும். வீடு பராமரிக்கும் வரை வீட்டின் உரிமையாளர், குடியேறும் வீட்டிற்கான வாடகை கட்டணம் செலுத்தப்படும். மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. முறையான சீரமைப்பு பணிகள் முடிவடைந்த உடனே அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் இருக்கும் மற்ற வீட்டார் அச்சப்பட தேவையில்லை. மண்ணின் தரம் குறித்து ஏற்கனவே பரிசோதனை மேற்கொண்டாலும் தொடர்ந்து பலமுறை ஆய்வுகளை நடத்தி வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.