< Back
மாநில செய்திகள்
பள்ளியில் சமையல் பாத்திரம் கழுவிய மாணவிகள்:  தலைமை ஆசிரியர், சமையலர் பணியிடை நீக்கம்
மாநில செய்திகள்

பள்ளியில் சமையல் பாத்திரம் கழுவிய மாணவிகள்: தலைமை ஆசிரியர், சமையலர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
29 Nov 2024 7:03 AM IST

பள்ளி மாணவிகள் சமையல் பாத்திரங்களை கழுவிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வெள்ளிமலை அருகே இன்னாடு கிராமத்தில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். இதற்காக மாணவர்களுக்கு அருகில் உள்ள சமையல் அறையில் உணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறு சமையல் செய்யும் பாத்திரங்களை அங்குள்ள சமையலரோ அல்லது உதவியாளரோ கழுவுவது இல்லை. மாறாக பள்ளியில் தங்கி படிக்கும் மாணவிகளே சமையல் பாத்திரங்களை கழுவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமையல் அறை பாத்திரங்களை பள்ளியில் படிக்கும் மாணவிகளே கழுவியதை ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலானது.

இதை பார்த்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாணவிகளை பள்ளி வேலைக்கு ஈடுபடுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாணவிகளை பாத்திரங்கள் கழுவும் பணியில் ஈடுபட வைத்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபஸ்டின், பள்ளி சமையலர் ராதிகா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்